இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை “ஒரு வரலாற்றுத் தருணம்” என அழைக்கிறார்கள்.
மூன்று பெண்களான நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி பெலா எம். திரிவேதி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா செப்டம்பர் 1ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
தலைமை நீதிபதி என்.வி ரமணா சக நீதிபதிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். உடன் 2018ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜியும் இருந்தார். இவர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. இந்திய நாளிதழ்கள் பலவற்றில் இந்த செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்தது.
இந்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை “பாலின பிரதிநிதித்துவத்திற்கான வரலாற்று தருணம்” என்று அழைத்தார்; அமெரிக்காவுக்கான இந்திய தூதர், இது “பெருமைமிக்க தருணம்” என்றார். வேறு சிலர் புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்து செய்திகளை ட்வீட் செய்தனர். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பாலின இடைவெளி குறைவதைக் குறிக்கும் விதத்தில் அமைந்த இந்த நியமனங்கள் வரவேற்கத்தக்கவையே. ஆனால் விமர்சகர்களோ இந்தியாவின் நீதித்துறை முழுவதும் இதுபோன்ற பாலின சமநிலை ஏற்படவில்லை என்று கூறுகின்றனர். சமீபத்தில் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியொருவர், உச்ச நீதிமன்றத்தை “வயோதிக சிறார்களின் மன்றம்” என்று அழைத்ததை இங்கே நினைவுகூரலாம்.
மூத்த வழக்கறிஞர் சினேகா கலிதா, முதல் பெண் தலைமை நீதிபதி ஆக நாகரத்னாவுக்கு வாய்ப்புள்ளதாக கொண்டாடுவதற்கு காட்டப்படும் உற்சாகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்கிறார். எல்லாம் நினைத்தபடி நடந்தாலும், 2027இல் நாகரத்னாவுக்கு தலைமை நீதிபதி ஆகும் காலம் வரும். ஆனால், தனது பதவிக்காலத்தின் கடைசி ஒரு மாதத்திலேயே அவருக்கு அந்த வாய்ப்பு வரும் என்று சினேகா கலிதா கூறுகிறார். “ஒரு பெண், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப்போகிறார் என்பது கொண்டாட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்த நியமனம் வெறும் அடையாளமாகவே இருக்கும். நீதித்துறையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது சினேகாவின் வாதம்.