மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை
டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்றின் தரம் மாசடைவதாகக் கூறப்படுகிறது.
காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல டெல்லி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ, டெல்லி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை மெத்தனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், செய்தியாளர்களிடம் கூறுகையில், “காற்றின் தரக் குறியீடு 450-ஐ தாண்டும் போது டெல்லியில் பள்ளிகள் மூடப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தனியார் நிறுவனங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளை மூட வேண்டும் என்று, எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.