ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் – தகவல்கள் வெளியாகின – mkural.com

ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த தற்கொலைதாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு வாகனத்தில் அப்பொழுது பயணித்துக்கொண்டிருந்தார். “நாங்கள் இலக்கு வைத்த நபரை தாக்கி விட்டதாகவே நம்புகிறோம்,” என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ ஆரம்பகட்ட செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் தாக்குதலின் பின்பு நடந்த வெடிப்பு அந்த வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை குறிக்கின்றது என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

குண்டு வைக்க திட்டமிட்ட இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது அமெரிக்காவின் வான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார் என்று ஏபி செய்தி முகமை கூறுகிறது.

வியாழனன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 170 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடக்கம்.