பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ், “இது நம்பிக்கைக்கு துரோகம், மன உறுதிக்கு துரோகம், குழந்தைகளுக்கு துரோகம்” என்று கூறினார்.

இது பிரான்சின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். “திருச்சபையின் அனைத்துப் பொறுப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் இறுதியாக நிறுவன ரீதியிலான அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். இது ஆயர்கள் மற்றும் போப் ஆண்டவர் இன்னும் செய்யத் தயாராக இல்லாத ஒன்று.” என்று அவர் கூறியுள்ளார்.