மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளியை திறக்க ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
மீண்டும் விசாரணை!
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆஜராகி நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பத்த உத்தரவுகளின்படி, பள்ளி செயல்பட்டு வருவதாகவும், அமைதியான சூழல் நிலவுவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாம்ராட், நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், பள்ளியை முழுமையாக திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரினார்.
மார்ச் முதல் வாரம் முதல்!
இதையடுத்து, மார்ச் முதல் வாரத்திலிருந்து எல்.கே.ஜி. முதல் நேரடி வகுப்புகளுடன் பள்ளியை முழுமையாக திறக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றோர் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியின் ஏ பிளாக் கட்டடத்தின் மூன்றாவது மாடி பூட்டி சீல் வைக்கப்பட்ட உத்தரவு தவிர, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட மற்ற அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் நீக்கிய நீதிபதி, மூன்றாவது தளத்துக்கு வைக்கப்பட்ட சீல், நீடிக்கும் என உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி செயல்படும்!
நடப்பு கல்வி ஆண்டு வரை பள்ளிக்கான போலீஸ் பாதுகாப்பு தொடர உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த கல்வி ஆண்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.