போண்டா மணிக்கு டிமிக்கி கொடுத்த ரசிகர்… 1 லட்சம் ரூபாய் அபேஸ் ஆனது எப்படி?

ரசிகர் என்ற பெயரில் வந்து, காமெடி நடிகர் போண்டா மணியிடம், ஏடிஎம் கார்டு மூலம் பணம் அபேஸ் செய்து, நகை வாங்கிய வாலிபர் கைது

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை போரூர், அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவரது ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல் வந்தார். பின் , மருத்துவமனையில் அவருடன் உடன் இருந்து பாசமாக பழகி வந்தார். அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி , மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து போண்டா மணி வீட்டிற்கு வந்தார். அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். பாசமாக இருப்பதை பார்த்து உண்மை என நம்பிய போண்டா மணியின் மனைவி மாதவி தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஸ் பிரித்தீவ்விடம் கொடுத்து மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

மருந்து வாங்க சென்ற ராஜேஸ் பிரித்தீவ் மாயமானார். சிறிது நேரத்தில் சென்னை உம்முடி பங்காரு நகைக் கடையிலிருந்து , மாதவியின் மொபைல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள நகை வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த மாதவி தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது இது குறி்தது மாதவி , போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் , நேற்று ராஜேஸ் பிரத்தீவ்வை கைது செய்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஊருக்கு ஒரு பெயர் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. தினேஷ, சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.