இந்தியா vs சீனா 1962 போர் வரலாறு: சீன வம்சாவளியைச் சேர்ந்த 3,000 பேர் ராஜஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட கதை

இந்த சம்பவம் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடந்தது. திடீரென்று இந்திய வீரர்களின் ஒரு குழு ஷில்லாங்கில் உள்ள டான் பாஸ்கோ பள்ளிக்கு வந்து அங்கு சீன வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓர் இடத்தை உருவாக்க தொடங்கியது. அந்த மாணவர்களில் ஒருவர் பதினாறு வயது யிங் ஷெங் வோங்.

மறுநாள் மாலை 4:30 மணியளவில் இந்திய வீரர்களின் ஒரு குழு, ஷெங்கின் வீட்டுக்கதவைத் தட்டியது. குடும்பத்தினரை தங்களுடன் நடக்கச் சொன்னது. நீங்கள் சில பொருட்களையும் பணத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஷெங்கின் தந்தையிடம் ராணுவ வீரர்கள் கூறினார். அன்று, யிங் ஷெங் வோங்கின் முழு குடும்பம், அவரது பெற்றோர், நான்கு சகோதரர்கள், இரட்டை சகோதரிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஷில்லாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ‘தி தியோலி வால்லாஸ்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் திலீப் டிசோஸா, இந்த வரலாற்றைப் பற்றி கூறுகிறார்.

“1962-ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இந்தியாவில் வாழும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் இந்திய மொழியை மட்டுமே பேசினர். ” “அப்போதைய இந்திய குடியரசு தலைவர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் ‘இந்திய பாதுகாப்புச் சட்டத்தில்’ கையெழுத்திட்டார், இதன் கீழ் எந்தவொரு நபரும் எதிரி நாட்டில் இருந்து வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம்.” “முன்னதாக 1942 ஆம் ஆண்டில், பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு வாழ்ந்த சுமார் ஒரு லட்சம் ஜப்பானியர்களும் இதேபோல் தடுத்து வைக்கப்பட்டனர்.” ஷில்லாங் சிறையில் நான்கு நாட்கள் கழித்த பின்னர் வோங் குடும்பம் குவஹாத்தி சிறைக்கு அனுப்பப்பட்டது. ஐந்து நாட்கள் அங்கு சிறையில் இருந்த பிறகு அவர்கள் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே ஒரு ரயில் அவர்களுக்காக காத்திருந்தது. அந்த ரயிலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சீன வம்சாவளி மக்களில், ‘தி தியோலி வாலா’ புத்தகத்தின் இணை ஆசிரியரான ஜாய் மாவின் அன்னையான எஃபா மாவும் ஒருவர்.