ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் ஆளுகை வந்த பிறகு அந்த நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கடந்த 15ஆம் தேதி தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த வார இறுதிவரை 28 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடன் அமெரிக்க அரசு செய்து கொண்ட உடன்பாட்டின்படி, இந்த மாத இறுதிக்குள்ளாக அந்நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். அதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், மீட்பு நடவடிக்கைக்கான அழுத்தத்தில் அமெரிக்கா இருப்பதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இறுதிக்கெடுவுக்குள் வெளிநாட்டினரை ஆப்கானிஸ்தானி்ல் மீட்க முடியாவிட்டால், அதை நீட்டிக்கக் கோரலாமா என்பது பற்றி மற்ற நாடுகளுடனும் தாம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
அத்தகைய நிலைமை வரக்கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் இன்னும் ஆயிரக்கணக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் வெளியேற்றும்போது, நெஞ்சை பிளக்கும் காட்சிகள் மற்றும் வலிகள் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெறாது என தோன்றுகிறது என்று தாம் கவலைப்படுவதாக ஜோ பைடன் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை வெளியேற்ற 18 வர்த்தக விமானங்களின் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்தது. காபூல் நகர விமான நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவங்களில் இதுவரை 20 பேர் இறந்திருப்பதாக நேட்டோ அதிகாரியொருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.