தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?

தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த முடிவுகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மாநில சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.

இது தொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டிற்குள்ளேயே நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் போக, வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக கூறப்பட்டிருந்தது. வெளிமாநிலங்களைப் பொறுத்தவரை தற்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் உள்ள முசிறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காடு, ஒடிஷாவில் உள்ள பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும்.

இந்த நான்கு இடங்களின் பின்னணி என்ன, இந்த இடங்களில் ஏன் மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தவுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். ஓடிஷா மாநிலத்தில் உள்ள பாலூர்

பாலூர் அல்லது பாலூரா என அழைக்கப்படும் இந்த இடம் ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் சத்திராபூர் உட்பிரிவில் சிலிகா ஏரியின் தெற்கு முனையில் அமைந்திருக்கிறது. அதேபோல, சிலிகா ஏரியின் கரையில் அமைந்திருக்கும் மானிக்கப்பட்னாவும் பாலூரைப் போலவே மிக முக்கியமான தலமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் பாலூர் முக்கிய துறைமுகமாகச் செயல்பட்டிருந்துள்ளது. தாலமி தன்னுடைய வரைபடத்தில் இந்த ஊரை பல்லுரா (Paloura) என்று குறிப்பிட்டுள்ளார்.

1984-85ல் பாலூரிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இந்தியத் தொல்லியல் துறை அகவாய்வுகளை நடத்தியது. மணற் குன்றுகளுக்கு மத்தியில் சுமார் அரை சதுர கி.மீ. பரப்பில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வுகளில் துருத்திக்கொண்டிருக்கும் பகுதிகளைக் கொண்ட செந்நிற மட்பாண்டங்கள் கிடைத்தன. இவை 12 – 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.