குலாப்: கலிங்கபட்டினம் – கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் – ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை – mkural.com

குலாப் புயல், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கலிங்கபட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

வடக்கு ஆந்திர பிரதேசத்தின் கடலோர பகுதியை தட்டிய புயல், தெற்கு கடலோர ஒடிஷாவை ஓட்டிய கரையை கடந்து வருவதாக அறிய முடிகிறது. இது குறித்து ஆந்திர பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையர் கண்ணபாபு கூறுகையில், குலாப் புயல் கலிங்கப்டடினம் மற்றும் ஒடிஷா இடையே கரையை தட்டியதாகவும், கலிங்கப்பட்டினத்துக்கு வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் புயல் கரையை தாக்கியதாகவும் தெரிவித்தார். புயல் கரையை முழுமையாக கடக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் அவர் கூறினார். கலிங்கப்பட்டினம் கடற்கரையில் மணிக்கு 75-95 கிமீ வேகத்தில் காற்று வீசும். எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் சூறாவளி மணிக்கு 75 முதல் 95 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனாமணி கூறினார். இன்று முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா மாவட்டங்களுக்கு புயல் அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பொழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆந்திரா, ஒடிஷா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.