ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபன்களின் முழு ஆதரவு இருப்பதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிறது யுனிசெஃப்.

கடந்த காலங்களில் தடுப்பு மருந்துகள் செலுத்துவதை தாலிபன்கள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இழக்க செய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் செய்யும் சதியே தடுப்பு மருந்துகள் என்று தாலிபன்கள் தெரிவித்திருந்தனர். நவம்பர் எட்டாம் தேதி தொடங்க உள்ள இந்த போலியோ முகாம் மூலம் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் ஒரு கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி முகாமில் பயன் பெறுவதற்கான வழி இல்லாமல் இருந்தனர். சுமார் மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலனடையும் தடுப்பு மருந்து முகாமாக இது இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.