தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தம்பதிகள் – என்ன செய்யப் போகிறார்கள் ?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி, திருவாரூர், சேலம், ராமநாதபுரம். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கணவன் – மனைவி இருவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியாகியது. இதில், கவுன்சிலராகியுள்ள கல்லூரி மாணவர்கள், ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்கள், சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற அதிருப்தியாளர்கள், சுயேச்சைகளாக வென்று ஆளும்கட்சி ஆதரவாளர்களாக மாறியவர்கள், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவியவர்கள், சுயேச்சைகள் தீர்மானிக்கும் தலைவர் பதவி என பல்வேறு சுவாரஸ்ய முடிவுகள் வந்துள்ளன. இவர்களுக்கு நடுவில் தம்பதிகள் சிலரும் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.

ஓரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு வார்டுகளுக்கான மக்கள் பணியை எப்படி திட்டமிட்டுள்ளார்கள் ? என்று இந்த தம்பதிகளிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர்களும் தங்கள் அரசியல் பணிகள், தேர்தல் போட்டி மற்றும் வெற்றி குறித்து பகிர்ந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 19, 20 வார்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கமணி – மனோன்மணி தம்பதியை தொடர்பு கொண்டோம். தங்கமணி பேசுகையில், ”என்னுடைய தந்தை காலத்தில் இருந்து எங்களது குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது. இந்த வார்ட்டில் குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து, பல்வேறு சமுதாயப் பணிகளை செய்துள்ளோம். இந்த பகுதிக்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. தற்போது 19, 20 என்று 2 வார்டுகளாக இருந்தாலும் முன்பு ஒரே வார்டாக 14வது வார்டு என்று இருந்தது. இதில், என்னுடைய சகோதரர் இந்திரஜித் நகராட்சி உறுப்பினராக இருந்தார். நான் 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். என்னுடைய மனைவி என்னோடு 15 ஆண்டுகளாக கட்சிப் பணியில் உள்ளார். எங்கள் உழைப்பை ஏற்று கட்சி வாய்ப்பளித்தது. அதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அருகருகே உள்ள வார்டுகள் என்பதால், தனி அலுவலகம் அமைத்து, பணியாளர்களை நியமித்து, மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். வாரத்திற்கு ஒரு நாள் என்னுடைய வார்டு மக்களை அவரும் அவருடைய வார்டு மக்களை நானும் நேரில் சந்திக்க உள்ளோம்,” என்றார்.