
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.
அலரி மாளிகையில் கடந்த 4ஆம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பிரதமர் நடத்தினார். இலங்கையிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த சந்திப்பை புறக்கணித்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் அந்த சந்திப்பில் கலந்துகொண்டது.
அந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழர் பிரச்சினைகள் அடங்கிய ஆவணமொன்றை கையளித்திருந்தனர்.
அத்துடன் தம்முடனான சந்திப்பொன்றை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியது. இதையடுத்து, அன்று மாலையே தமது இல்லத்துக்கு வருகைத் தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு தமிழ் வினவியது.
இலங்கை கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் எதிர்நோக்கியுள்ள வைரஸ் பிரச்சினைகள் மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் கூறினார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல், கொரோனா பிரச்சினைகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு அவசரப்படாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இனப் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிற போதிலும், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப் பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கம் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பிளவுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் ஒன்றிணைந்து தமிழர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை தருவார்கள் என நம்ப முடியாதுள்ளதாகவும் கூறினார்.