ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 13 பேர் பலியாகியுள்ளது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மூவரின் உடல்கள் ரசாயன ஆலைக்கு அருகிலுள்ள பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் 10 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளதாகவும் தெலுங்கு சேவை தெரிவிக்கிறது.
இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அந்த ஆலை இன்று திறக்கப்பட்டது. காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. வேறு ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்க முயன்ற வருகிறோம். இதுவரை 90-95% கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று இன்று காலை 10 மணியளவில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர் தீப்தி பத்தினி தெரிவிக்கிறார்.
“1 – 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் ஆர்.கே. மீனா தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார்.
ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசாயன வாயு கசிவு உண்டான எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான, தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஜி கெமிக்கல்ஸ் நிறுவனம், குடியிருப்புவாசிகள் மற்றும் தங்கள் ஆலை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
ரசாயன வாயுக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.