2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ரூ.6000 நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.2000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரையடுத்து தமிழக வேளாண்துறை, சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைத்தது.
கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணையில் கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தகுதியற்ற நபர்களின் வங்கி கணக்குகளில் விவசாயிகளுக்கான நிதி உதவித் தொகை செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர். “பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் கிடைக்கும் ரூ.6000 உதவித் தொகை, 3 முதல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச பொருளாதார உதவியாக கருதப்படுகிறது. இந்த தொகையை நம்பி ஏராளமான நலிவடைந்த விவசாயிகள் வேளாண்மைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், தகுதிவாய்ந்த விவசாயிகளை அரசின் உதவித் தொகை சென்றடையாமல், விவசாயிகள் அல்லாதவர்களுக்கும், ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே வெளிப்படையாக நடைபெற்று வருகிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ராமமூர்த்தி.
கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி போலியான விண்ணப்பங்கள் உருவாக்கம்
சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் முறைகேடுகள் செய்தும் நிதி உதவித் தொகையை பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டவை எனவும் கூறுகிறார் இவர்.
“கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னர், இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரியிடம் சமர்பித்து சான்று வாங்க வேண்டும். பின்னர், விவசாயியின் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறைக்கு அனுப்பி ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். உரிய பரிசோதனைகளுக்கு பின் மாவட்ட வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்படும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை அனைத்தும் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் கணினி மையங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இங்கு தான் முறைகேடுகளும் துவங்கியுள்ளன.”