கொரோனா நோய்த் தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணத்தைத் தழுவி இருப்பதாக அந்த மருத்துவமனை கூறுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. முன்பாக, டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 25 நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இப்படி ஒரு பக்கம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், தயார் நிலையில் இல்லாத இந்திய மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.
அதோடு தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர்கள் என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பல அத்தியவசிய பொருட்கள் மற்றும் வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டால் இந்தியாவில் நோயாளிகள் இறந்து போவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் போதாத நிலையில் 20 நோயாளிகள் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவரத்தை பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தங்கள் மருத்துவமனையின் டேங்கில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும், ஆனால், சிலிண்டர்களை ஏற்பாடு செய்து அவற்றை ஆக்சிஜன் குழாய் இணைத்திருந்ததாகவும், ஆனால், போதிய அழுத்தத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 20 நோயாளிகள் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் தீப் பலுஜா தெரிவித்துள்ளார்.