உத்தர பிரதேச மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பல நிகழ்வுகள் சமீபத்திய வாரங்களாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு நடத்தி வரும் கூட்டங்கள், அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கூட்டங்களின் தாக்கமாக விரைவில் மாநில பாஜக அளவிலும் அமைச்சரவையிலும் மாற்றத்துக்கான சாத்தியம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்த விவகாரம் கட்சியின் எல்லா நிலைகளிலும் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த களேபரத்துக்குக் காரணம், உத்தர பிரதேச அரசியலில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒத்திசைவு இல்லாமல் புதிதாக ஒரு பிரமுகர் மாநில அரசியலில் நுழைக்கப்பட்டிருக்கிறார். உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சிக்குள் எரிகல் போல அவரது பிரவேசம் இருப்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் பார்க்கிறார்கள். அந்த நபரின் பெயர் அரவிந்த் குமார் சர்மா. இவர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் உயரதிகாரி. குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோதியிடம் மிகவும் நெருக்கமாக பழகக்கூடியவராகவும் அவரது நம்பிக்கைக்கு உகந்தவராகவும் அறியப்படுகிறார்.
மத்திய அரசுப்பணியில் இருந்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி விலகிய இவர், அடுத்த மூன்று நாட்களிலேயே உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்வானார். திடீரென கட்சிக்குள் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு அடுத்த சில நாட்களிலேயே மேலவை உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்த பாஜக மத்திய தலைமையின் நடவடிக்கை, மாநில பாஜகவினர் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பதவி ஓய்வுக்கு பிறகு மாநில அரசுக்குள் நுழைவது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. அதுவும் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பது அவரை வேறு ஒரு உயர் பதவிக்கு தயார்படுத்துவதற்காகவோ என்று உத்தர பிரதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.