டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பாக கலந்து கொள்ளவிருக்கும் ‘தயாரா’ குதிரை மற்றும் ஃபவாத் மிர்சா – பதக்க வாய்ப்பு எப்படி?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினரைப்பற்றி நினைத்தால், வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோரே நம் கண்முன்னே வருவார்கள்.. ஆனால் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக ஒரு குதிரை பங்கேற்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த குதிரையின் பெயர் தயாரா – 4. ஒலிம்பிக்கில் இந்திய குதிரையேற்ற வீரர் ஃபவாத் மிர்சாவுடன் சேர்ந்து அது போட்டியிடப்போகிறது. 2011 ஆம் ஆண்டில் பிறந்த தயாரா, ஜெர்மன் பே ஹோல்ஸ்டெய்னர் இனத்தைச் சேர்ந்தது. இதன் நிறம் பழுப்பு. இதுவரை இது 23 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வென்றுள்ளது.

ஃபவாத்திற்கு நிதியுதவி அளிக்கும் எம்பஸி (Embassy) குழுமம், 2019 ஆம் ஆண்டில் 2,75,000 யூரோக்கள் (சுமார் 2 கோடியே 43 லட்சம் ரூபாய்) விலை கொடுத்து தயாராவை வாங்கியது. இந்தக் குழுமம், ஃபவாதிற்காக மேலும் மூன்று குதிரைகளையும் வாங்கியிருந்தது.

இவற்றில் தயாரா – 4 மற்றும் சென்யூர் மெடிகோட் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன. இரு குதிரைகளின் தற்போதைய செயல்திறனைக் கருத்தில் கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தயாராவுடன் விளையாட ஃபவாத் முடிவு செய்துள்ளார்.

“தயாரா இப்போது சிறந்த ஃபார்மில் உள்ளது. உலக அளவில் செயல்திறனை வெளிபடுத்த வேண்டிய அழுத்தத்தை தயாராவால் கையாள முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

குதிரையேற்றம் என்பது மற்ற விளையாட்டுகளிலிருந்து வேறுபட்ட ஒன்று. இங்கே குதிரையேற்ற வீரர்களுக்கும், குதிரைக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியம். இத்தகைய உறவை ஏற்படுத்தும் பொருட்டு குதிரை வீரர்கள், குதிரையுடன் சில வருடங்கள் செலவிடுகிறார்கள். அதனுடன் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். கூடவே அதை கவனித்துக் கொள்கிறார்கள்.