தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு, ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்படாமல் மக்கள் அலட்சியமாக நடமாடுவதால் மூன்றாம் அலைக்கான பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதன் காரணமாக அலட்சியமாக செயல்படும் கடைகள் மீதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரம், கோவை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்பாட்டில் வராததால் அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்புகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. `மூன்றாம் அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பு வரலாம்’ எனக் கூறப்பட்டுள்ளதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.