இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கியத் தீவிரவாத தலைவர் ஒருவரும் அவரது கூட்டாளி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட தீவிரவாத தலைவர் பெயரை போலீசார் குறிப்பிடவில்லை. ஆனால், ராணுவம், துணை ராணுவப் படைகள், போலீஸ் ஆகியவை பெய்க் போரா கிராமத்தில் கூட்டாக நடத்திய முற்றுகையில் ரியாஸ் நைகூ என்ற தீவிரவாதத் தலைவர் சுற்றி வளைக்கப்பட்டதாக தெற்கு காஷ்மீரின் அவந்தி போரா பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
“தற்போது நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் மனோஜ் குமார் தெரிவிக்கிறார்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் உயர்நிலை போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 8 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினர் இந்த தாக்குதலை முன்னெடுத்தனர்.
உள்ளூர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் உயிரோடிருந்த கடைசி தலைவர் ரியாஸ் நைகூ. இவருக்கு வயது 40. கடந்த 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பிரபல தலைவராக இருந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து அமைப்பின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நைகூ. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை மீளக் கட்டமைத்து வந்ததாகவும், பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகவும் நைகூ மீது போலீஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் அவரது தலைக்கு ரூ.12 லட்சம் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதம் முதல் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த குளிர்காலத்தில்கூட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் “கடந்த ஜனவரி முதல் நைகூ உட்பட 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மூத்த ராணுவ, போலீஸ் அதிகாரிகள் உள்பட 20 பாதுகாப்புப் படையினரை நாங்களும் இழந்திருக்கிறோம்” என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.